பதிவு செய்த நாள்
28
நவ
2022
10:11
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கொடியேற்றத்துடன் தீப திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பஞ்ச மூர்த்திகள் தங்க கொடி மரம் முன் எழுந்தருளினர். தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, 63 அடி உயர தங்க கொடி மரத்தில், காலை, 6:10 மணியளவில் விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. அப்போது பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என, கோஷமிட்டனர். தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், ஏழாம் நாளான டிச. 3ல், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், டிச.,6ல், அதிகாலை, 4:00, மணிக்கு கோவில் கருவறை எதிரே பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. தீபத்திருவிழா கொடியேற்றத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கோவில் வளாகம் களை கட்டியது.