திருப்புத்தூர்: திருப்புத்தூர் மேலத்திருத்தளிநாதர் கோயிலில் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிேஷகம் நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயில் சீதளிகுளத்திற்கு மேற்கே அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த வாரம் முதல் சோமவார சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. நேற்று மாலை 5:00 மணிக்கு பாஸ்கரக் குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து மூலவர் சன்னதி முன்பாக நெல்லில் 108 சங்குகள் வரிசைப்படுத்தப்பட்டு சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது. பூஜைகள் நிறைவடைந்து கலசங்கள் மூலவர் சன்னதிக்கு புறப்பாடாகியது. புனித கலச நீரால் மூலவருக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. பெரிய கோயிலான திருத்தளிநாதர் சிவகாமி அம்மன் கோயிலிலும் நேற்று மாலை யாகசாலை பூஜைகள் நடந்து 108 சங்காபிேஷகம் நடந்து மூலவர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளாக பக்தர்கள் கூடி தீபாராதனையை தரிசித்தனர்.