பதிவு செய்த நாள்
30
நவ
2022
04:11
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருநாளான, டிச., 6ம் தேதி, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், வரும், டிச., 6ம் தேதி, கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் செல்ல, இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: வழக்கமாக, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அப்போது, மலைக்கு மேல் ஏராளமான வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கார்த்திகை தீப திருநாளான, வரும் டிசம்பர் 6ம் தேதி, காலை 6:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் செல்ல இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அடிவாரத்தில் இருந்து தேவஸ்தான பஸ்கள் மூலம் பக்தர்கள் மலைக்கு மேல் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். இவ்வாறு கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.