பதிவு செய்த நாள்
02
டிச
2022
03:12
ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் நடந்தது.
ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் நூறு ஆண்டுகளைக் கடந்த பழமையான கோயிலாகும். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 15 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக கோயிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் விதமாக இன்று பாலாலய பூஜைகள் நடந்தது. கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், ஊராட்சி ஒன்றிய தலைவர் லோகிராஜன், அ.தி.மு.க., நகர் செயலாளர் அருண்மதி கணேசன், கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர்கள் கார்த்திகேயன், பிரவீன் குமார் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரர்கள் மூலம் கோயில் சுற்றுப் பிரகாரத்தில் கல் பதித்தல், பழமை மாறாமல் சுவர்களை சுத்தம் செய்தல், தட்டு ஓடு பதித்தல், கோபுரத்திற்கு வர்ணம் பூசுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஹிந்து அறநிலைத்துறையினர் தெரிவித்தனர்.