பதிவு செய்த நாள்
02
டிச
2022
07:12
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று நடந்த ஆறாம் நாள் தீப திருவிழாவில், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் மற்றும் 63 நாயன்மார்கள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று நடந்த ஆறாம் நாள் தீப திருவிழாவில், காலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, சிவபெருமானுக்கு தொண்டு செய்து வாழ்ந்த, 63 நாயன்மார்களை போற்றும் வகையில், நாயன்மார்கள் ஊர்வலம் நடந்தது. இதில், சமயக்குரவர்கள் சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட, 63 நாயன்மார்கள் மாட வீதியில் வலம் வந்தனர். தொடர்ந்து, யானை வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் (உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் நின்ற நிலை அலங்காரம்) சுவாமி வீதி உலா நடந்தது.
இரவு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி ஆச்சி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், 54 அடி உயர வெள்ளி மஹா ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாளை 3ம் தேதி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது.