ராமேஸ்வரம் கோயிலில் கங்கை தீர்த்தம் நோ : பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2022 05:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அபிஷேகத்திற்கு கங்கை தீர்த்தம் சப்ளை இல்லாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
தீர்த்த தலமான ராமேஸ்வரம் கோயிலில் 22 தீர்த்தங்களை நீராடி தரிசிக்க தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் பல நூறு ஆண்டுகளாக உத்தரகாண்ட் ஹரித்துவாரில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித கங்கை நீரை சுவாமி சிலைக்கு அபிஷேகம் செய்து பூஜை நடக்கும். மேலும் பக்தர்களுக்கு வில்வ இலையுடன் கோடி தீர்த்தமும் பிரசாதமாக வழங்குவர்.
இதனை கண்டு பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதி தரிசனம் செய்வார்கள். இதில் கங்கை தீர்த்தத்தை 200 மி.லி., அளவில் பித்தளை கலசத்தில் அடைத்து ரூ.50 க்கு கோயில் நிர்வாகம் விற்றது. ஆனால் கடந்த ஓராண்டாக ஹரித்துவாரில் இருந்து நன்கொடையாளர் வழங்கிய கங்கை தீர்த்தத்தை பெற கோயில் அதிகாரி கவனம் செலுத்தாமல் கைவிட்டார். இதனால் தற்போது சுவாமிக்கு கங்கை அபிஷேகமும், பக்தருக்கு தீர்த்தம் விற்பதும் இல்லை. இதனால் பக்தர்கள் கங்கை அபிஷேகம் செய்ய முடியாமல், தீர்த்தம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து ராமேஸ்வரம் சேர்ந்த புரோகிதர் ராமு கூறுகையில் : கங்கை தீர்த்தத்தை பெற பல முறை வலியுறுத்தியும் கோயில் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் சுவாமிக்கு கங்கை தீர்த்த அபிஷேகம் இல்லை, பக்தர்களுக்கு சப்ளையும் இல்லை. அதிகாரிகள் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளதால், பாரம்பரிய மரபுகளை காற்றில் பறக்க விடுகின்றனர் என்றார்.