பதிவு செய்த நாள்
06
டிச
2022
05:12
திருவண்ணாமலை,: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில், முக்கிய பிரமுகர்கள் மஹா தீபத்தை காணும் வகையில், அவர்களுக்கென கூடாரம் அமைத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையால் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவில் கொடிமரம் எதிரிலுள்ள தீப தரிசன மண்டபத்தில், பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது, ஆண்டிற்கு ஒரு நிமிடம் மட்டுமே காட்சி அளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவம், மற்றும் மஹா தீப தரிசனம், இதை மூன்றும் ஒரு சேர காண்பவர்களுக்கு, 21 தலைமுறைக்கு, முக்தி கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.
இந்த அரிய காட்சியை காண, உயர் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆர்வம் செலுத்துவர். ஆனால், கோவில் வளாகத்தில், 6,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் காணும் வகையில் இடம் உள்ளதால், கோவிலினுள் செல்ல அனைவரும் போட்டி போடுவர். இந்நிலையில், இந்தாண்டு தீப திருவிழாவை காண, தமிழக கவர்னர் ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் வருவதாக கூறப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி, கோவில் வளாகத்திலுள்ள மடப்பள்ளியின் மேல் கூடாரம் அமைத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட கலெக்டர் முருகேஷ், நிருபர்களிடம் கூறியதாவது: தீப திருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, 43 சிறப்பு ரயில்கள், மூன்று நாட்களுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், 2,700 சிறப்பு பஸ்கள் மூலம், 7,000 ‘டிரிப்’ இயக்கப்பட உள்ளது. இதுவரை எந்த கவர்னரும் வருவதாக உறுதிப்பட தகவல் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.