பரமக்குடி: பரமக்குடி சிவன் மற்றும் முருகன் கோயில்களில் திருக்கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு சுவாமி பிரியா விடை உடன் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகினார். பின்னர் இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து, சுவாமி புறப்படாகினார். அப்போது பரணி தீபம் ஏற்றப்பட்டு, கோயில் முன்பு சிவாச்சாரியார்கள் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வை நடத்தினர்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்தனர். அப்போது கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
*எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் சிறப்பு தீப ஆராதனைகளுக்கு பின் இரவு 7:00 மணிக்கு மேல் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
*பரமக்குடி தரைப்பாலம் அருகில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 8:00 மணிக்கு கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
*நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் 15 ஆம் ஆண்டு திருக்கார்த்திகை மகா நாகதீபம் ஏற்றும் விழா நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் முன்புள்ள சந்தியா வந்தன மகா மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மகா மண்டபத்தின் மீது மகா நாக தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் தீப ஒளி காட்சி தரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் நகரில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் மக்கள் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.