பதிவு செய்த நாள்
08
டிச
2022
10:12
மதுரை: தமிழக கோயில்கள், அதைச் சுற்றியுள்ள நிலங்கள் மூன்றாம் நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, மத மற்றும் கோயில் நடவடிக்கைகள் தவிர மற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தாலும், போதுமானதாக இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை பதிவு செய்துள்ளது.
திருச்செந்துார் சீருடையார்புரம் வேல்முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் கீழ திருச்செந்துார் தெப்பக்குளம் தெருவில் உள்ளது. அக்குறிப்பிட்ட சர்வே எண்ணிற்கு உட்பட்ட நிலம் சட்டவிரோதமாக மூன்றாம் நபருக்கு விற்கப்பட்டுள்ளது. அங்கு சட்டவிரோதமாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானத்தையும் அரசுத் தரப்பில் தடுக்கவில்லை. நிலத்தை மீட்கக் கோரி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வேல்முருகன் மனு செய்தார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பு: கோயில்களுக்கு சொந்தமான நிலத்தை பாதுகாப்பதோடு மட்டுமின்றி, மூன்றாம் தரப்பினருக்கு தாரை வார்க்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய ஹிந்து அறநிலையத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: தமிழக கோயில்கள் பழங்கால கலாசாரத்தை அடையாளப்படுத்துவது மட்டுமின்றி, கலை, அறிவியல், சிற்பக்கலை ஆகிய துறைகளில் அறிவு மற்றும் திறமைக்கு சான்றாக உள்ளது. ஆன்மிக நடவடிக்கைகளுக்கும் வழிகோலுவதாகவும் இந்நீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. சமய நிறுவனங்களின் சொத்துக்கள் குறிப்பாக கோயில்களின் சொத்துக்களை அவற்றின் மேம்பாட்டிற்காக முறையாக பராமரிக்க வேண்டும். கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்கள், வருவாய் முறையாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்ய ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் கடமைப்பட்டுள்ளார்.
தமிழக கோயில்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு நிலங்கள் மூன்றாம் நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, மத மற்றும் கோயில் நடவடிக்கைகள் தவிர மற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அது போதுமானதாக இல்லை என்பது இந்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து தெரிகிறது. இவ்வழக்கில் திருச்செந்துார் கோயில் மற்றும் அதைச் சுற்றி கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களில் அத்துமீறல் அல்லது ஆக்கிரமிப்பை கண்டறிய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த ஆய்வு செய்ய உத்தரவிடுவது பொருத்தமானதாக இருக்கும் என இந்நீதிமன்றம் கருதுகிறது. ஏதேனும் ஆக்கிரமிப்பு இருந்தால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உரிய விளக்கமளிக்க வாய்ப்பளித்து சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தனி நபர்கள், கோயில் இடையே சிவில் வழக்கு நிலுவையில் இருந்தால், கோயிலின் சொத்துக்களை மீட்க, சட்டப்படி கையகப்படுத்த தடையாக இருக்காது. கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை அடையாளம் காண, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகள் அறநிலையத்துறைக்கு உதவ வேண்டும் என்பதை குறிப்பிடத் தேவையில்லை. இவ்வாறு உத்தரவிட்டனர்.