பதிவு செய்த நாள்
08
டிச
2022
10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழாவையொட்டி கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரருக்கு வழி நெடுகிலும் பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் கடந்த, 6ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தீப திருவிழாவையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன், கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மேலும், கிரிவலப்பாதையிலுள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கிராமத்திலுள்ள ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. தை மாதத்தில் நடக்கும் திருவூடல் திருவிழா மற்றும் தீபவிழாவில், மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள், என ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து நேற்றிரவு, அய்யங்குளத்தில் நடந்த தெப்பல் உற்சவத்தில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பராசக்தி அம்மன், மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.