இரவில் தடை.. காலையில் அனுமதி: மன்னர் கால மரபை மாற்ற திமுக அரசு முயற்சி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2022 09:12
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து காவடி எடுக்க இரவில் விதிக்கப்பட்ட தடை, நேற்று காலையில் நீக்கப்பட்டதால், காவடி பவனி புறப்பட்டு சென்றது. மன்னர் கால மரபை மாற்ற தி.மு.க. அரசு முயற்சிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூருடன் இணைந்திருந்த போது மன்னர் உத்தரவுப்படி, கார்த்திகை கடைசி வெள்ளியில் குமாரகோவிலுக்கு காவடி எடுப்பது வழக்கம். மன்னர் ஆட்சி மறைந்த பிறகும் இந்த மரபு கடை பிடிக்கப்படுகிறது. நேற்று கடைசி வெள்ளி என்பதால் நேற்று முன்தினம் இரவு தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து காவடி எடுக்க வேண்டாம் என்று மேலிட உத்தரவு வந்ததால் காவடி அபிஷேகம் உள்ளிட்ட சடங்குகள் நிறுத்தப்பட்டன. இதுபற்றி தகவல் தெரிந்து பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணியினர் ஏராளமானோர் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்தனர். போலீஸ் எடுக்காத பட்சத்தில் அங்கிருந்து காவடி எடுக்க இவர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் அதிகாலையில் மீண்டும் போலீசிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து காலையில் காவடிகள் புறப்பட்டு சென்றன. மன்னர் காலத்தில் இருந்து வரும் மரபுகளை தி.மு.க., அரசு மாற்ற முயற்சிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதுபோல தக்கலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து , பறக்கும் காவடி, வேல்காவடி, மலர் காவடி என நுாற்றுக்கணக்கான காவடிகள் குமாரகோவிலுக்கு வந்தன.