பதிவு செய்த நாள்
12
டிச
2022
12:12
ப.வேலுார்: பரமத்தி வேலுார் அருகே, கரும்பு தோட்டத்தில் கண்டறியப்பட்ட, 11 அடி உயர சிவலிங்கத்தை, வேறிடம் மாற்றுவதற்கு, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே சாணார்பாளையத்தை சேர்ந்த விவசாயி நடராஜ், 68; இவரது கரும்பு தோட்டத்தில், 11 அடி உயர சிவலிங்கம், கடந்த மாதம், 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. நிலத்துக்கு மேல், 8 அடி உயரம், அடியில் மூன்றடி உயரமும் கொண்டு, பிரம்ம சூத்திர குறியீட்டுடன், காவிரி கரையை பார்த்தவாறு உள்ளது. இதையறிந்த பக்தர்கள், சிவனடியார்கள் தினமும் வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் சிவலிங்கத்தை வேறிடத்துக்கு மாற்ற முடிவு செய்து, பக்தர்கள் மற்றும் மக்கள் அதற்கான முயற்சியில் நேற்று இறங்கினர். இதையறிந்து சென்ற வருவாய் துறை அதிகாரிகள், வேறிடத்துக்கு மாற்ற தடை விதித்தனர்.
இதுகுறித்து சிவனடியார்கள் கூறியதாவது: இந்த இடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும். லிங்கத்தின் அமைப்பு மற்றும் பிரம்ம சூத்திர குறியீட்டை பார்க்கும்போது, ஆறாம் நுாற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கரும்பு காட்டுக்குள் இருப்பதால், விளக்கேற்றி வழிபடும்போது, தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்பான வேறிடத்துக்கு மாற்ற முடிவு செய்தோம். ஆனால், வருவாய் துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து வி.ஏ.ஓ., ரேவதி கூறுகையில், ‘‘சிவலிங்கத்தை வேறிடத்துக்கு மாற்ற, ப.வேலுார் தாசில்தார் தடை விதித்துள்ளார். தொல்லியல் துறை ஆய்வுக்குப் பிறகே, இதுகுறித்து முடிவு செய்யப்படும்,’’ என்றார்.