தொல்லியல் துறை அலட்சியத்தால் சிதிலமடையும் சிற்பங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2022 03:12
மேலூர்: மேலுார், கீழவளவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சபாண்டவர் மலையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் வரலாற்று சின்னங்கள் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது.
இம் மலையில் சமணர் காலத்து கல் படுக்கைகள், குகைகள் உள்ளது. கி.பி., 2-11 ம் நூற்றாண்டு வரை சமணர்கள் வழிபாட்டு தலமாக இம்மலை இருந்துள்ளது. மலையில் மூன்று தீர்தங்கரர் உருவங்களும்,குகை தளத்தில் ஆறு தீர்த்தங்கரர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளது. தவிர பிராமிய கல்வெட்டுக்கள், கல் படிக்கட்டுகளும் உள்ளன. மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் மற்றும் முருகன் கோயில்களில் கீழவளவு பகுதி மக்கள் திருமணம் செய்வது வழக்கம். வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னங்கள் நிறைந்த இம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பெயரளவில் வேலி அமைத்துள்ளனரே தவிர முறையான பராமரிப்பு இல்லை. கீழவளவு சமூக ஆர்வலர் செந்தில்குமார் கூறியதாவது: மெயின் ரோட்டில் இருந்து மலைக்கு செல்வதற்கு பாதை கிடையாது. அதனால் தனியார் இடத்தின் வழியாக செல்கிறோம். பாதை அமைத்து தரக்கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், வருவாய் மற்றும் தொல்லியல் துறையினரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மலையின் முன் பகுதியில் மட்டும் வேலி அமைத்து விட்டு பிற பகுதிகளில் அமைக்காமல் வேலி அமைக்கும் சிமிண்ட் தூன்களை வருடக்கணக்கில் அடுக்கிவைத்துள்னர். பாதுகாவலர் அமைக்கும் முன் குகை மற்றும் மலையில் செதுக்கப்பட்டுள்ள சிலைகள் மீது தகரத்தினால் ஆன கூரைகளை சமூக விரோதிகள் கடத்தி சென்றதால் சிலைகள் மீது மழை மற்றும் வெயில் பட்டு சிதைய ஆரம்பித்துள்ளது. மேலும் இம் மலையை வெளிநாடு, மாநில மற்றும் மாவட்டங்களை சேர்ந்த வரலாற்று துறை மாணவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சபாண்டவர் மலை பரிதாபத்தில் உள்ளதால் தொல்லியல் துறையினர் முறையாக பாதுகாக்க வேண்டும் என்றார். தொல்லியல்துறை அதிகாரி பாலமுருகன் கூறுகையில், "பஞ்சபாண்டவர் மலையின் அடிப்படை தேவைகள் குறித்து உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி போதிய வசதிகள் செய்யப்படும்" என்றார்.