சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் : காத்திருப்பால் கடும் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2022 08:12
சபரிமலை :சபரிமலையில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் பரிதவிக்கின்றனர். அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் சரங்குத்தியில் கியூ காம்ப்ளக்ஸ் கதவுகளை பக்தர்கள் உடைத்தனர்.
சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. 8 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. நேற்று காலை முதல் பம்பை மணல் பரப்பில் தடுப்பு வேலிகள் மூலம் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வைக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். பம்பையில் இருந்து பயணம் தொடங்கி நீலிமலை, அப்பாச்சிமேடு செங்குத்தான ஏற்றம் ஏறி களைப்படைந்து வரும் பக்தர்கள் மீண்டும் சரங்குத்தி மேடான பாதையில் அனுப்பி அங்கு கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்படுகின்றனர். அங்கு போதுமான வசதிகள் இல்லை.
களைப்படைந்த பக்தர்களை இங்கு மீண்டும் காக்க வைப்பதால் அவர்கள் ஆவேசம் அடைகின்றனர். நேற்று முன்தினம் இரவு இங்குள்ள கதவுகளை உடைத்து பக்தர்கள் வெளியேறியனர்.பெரிய நடைப்பந்தலில் சிறுவயதினர் மற்றும் முதியவர்களுக்கான தனி வரிசையும் நேற்று குழப்பத்திற்குள்ளானது. மற்ற வரிசையில் இருந்த பக்தர்கள் ஏறிக்குதித்து இந்த வரிசைக்கு மாறியதால் இதிலும் நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையில் மரக்கூட்டத்தில் இருந்து பக்தர்களை கட்டாயப்படுத்தி சரங்குத்தி வழியாக அனுப்பும் போலீசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த் சன்னிதானம் வந்த போது, தேவை இல்லாமல் மரக்கூட்டத்தில் இருந்து சந்திராங்கதன் ரோட்டுக்கு வர தடை விதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக போலீசார் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.