சபரிமலை கியூ காம்ப்ளக்சில் பக்தர்கள்; சோதனை முறையில் அமல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2022 02:12
சபரிமலை : கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் பக்தர்களை கியூ காம்ப்ளக்சில் தங்க வைத்து அனுப்பும் முறை நேற்று சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது.
பம்பை-சபரிமலை பாதையில் மரக்கூட்டத்தில் இருந்து சரங்குத்தி வழியாகவும், சந்திராங்கதன் ரோடு வழியாகவும் சன்னிதானம் வரமுடியும். இதில் சரங்குத்தி பாதையில் மேடு ஏறி செல்ல வேண்டும். சந்திராங்கதன் ரோடு சமநிலையில் இருக்கும். இந்த பாதை வழியாக பக்தர்கள் திரும்பி செல்வதால் கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் சிரமம் ஏற்படுகிறது. நேற்று ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் சோதனை அடிப்படையில் பக்தர்கள் சரங்குத்தி வழியாக திருப்பி விடப்பட்டனர். ஏ.டி.ஜி.பி. அஜித்குமார் தலைமையில் போலீசார் இங்கு பக்தர்களை சரங்குத்தியில் உள்ள ஆறு கியூ காம்பளக்சில் 25 நிமிடம் ஓய்வெடுக்க வைத்து பின்னர் சன்னிதானத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று சன்னிதான சுற்றுப்புறங்களில் பெரிய அளவில் நெரிசல் இல்லை. இனி வரும் நாட்களில் கூட்டம் அதிகமாகும் பட்சத்தில் சரங்குத்தி வழியாக பக்தர்களை அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.