பதிவு செய்த நாள்
26
டிச
2022
09:12
பழநி: பழநி மலைக்கோயில் மூலஸ்தான கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
பழநி மலைக்கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 2019 டிசம்பர் மாதம் கும்பாபிஷேக பணிக்காக பாலாலயம் நடைபெற்றது. 2023 ஜன.,27 அன்று மலைக்கோயில் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காலை பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் விநாயகர் வழிபாடு, இரண்டு திருக்கம்பங்களுக்கு கலச பூஜை செய்யப்பட்டது. அதன் பின் திருக்கம்பங்களை ஹிந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏக்கள், எம்.பி,அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் எடுத்து கோயில் வலம் வந்தனர். அதன் பின் நவ வீரர்கள் கோயில் அருகே ஒரு திருக்கம்பம் நடப்பட்டது. மற்றொரு திருக்கம்பம் மலைக்கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நடப்பட்டது. அதன் பின் ராஜகோபுர கலசங்களுக்கு தங்க தகடு ஒட்டும் பணிகளை துவங்கி வைத்தார். மலைக்கோயில் கருவறை சுற்றியுள்ள நீராளிபத்தி மண்டபத்தை சுற்றிலும் உள்ள எவர்சில்வர் கம்பிகளால் ஆன தடுப்புகள் கதவுகள் ஆகியவற்றை மாற்றி ரூ.95 லட்சம் மதிப்பிலான பித்தளைகளான தடுப்புகள் மற்றும் கதவுகள் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. மேலும் மகா மண்டபத்திற்கும் நீராளிபத்தி மண்டபத்திற்கும் இடையேயும், தங்க விமானத்தைச் சுற்றியும் பித்தளை கம்பி வேலி அமைக்கும் பணி துவங்கி வைக்கப்பட்டது. ரோப்கார் நிலையத்தில் மின்கல மகிழுந்தை பக்தர் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஹிந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி, பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன், திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, சுற்றுலா பண்பாடு அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், மாவட்ட கலெக்டர் விசாகன், மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.