பாலக்காடு: பாலக்காடு தத்தமங்கலத்தில் அய்யப்ப மகோத்ஸவத்தை முன்னிட்டு இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் தத்தமங்கலம் மேற்கு கிராமத்தில் சாஸ்தா, கிருஷ்ணர், சிவன் கோவில்கள் உள்ளன. இங்கு தர்ம சாஸ்தா உற்சவ டிரஸ்ட் சார்பில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் அய்யப்ப மகோத்ஸவம் நடக்கிறது. கடந்த டிச., 21ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. இதையொட்டி இரண்டு நாளாக ரதோற்ஸவம் மற்றும் சாஸ்தாபிரீதி பெருவிழா பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடந்தது.
திருதேர் பெருவிழாவின் இரண்டாவது நாளான இன்று காலை 6 மணிக்கு திருமஞ்சனம், ருத்ராபிஷேகம், மசாநிவேத்தியம், 10.30 மணியளவில் தகில்-நாதஸ்வர முழங்க உற்சவ மூர்த்திகள் முத்துமணி குடைசூடி பல்லக்கில் தெருவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து 11.00 மணியளில் பக்தர்கள் முன்னிலையில் ரதாரோகணம் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து பஞ்சவாத்தியம் முழங்க "சுவாமியே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா " என பக்தர்கள் கோஷம் எழுப்ப திருத்தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி கிராம சுற்று வட்டாரத்தில் உள்ள 13 கோவில்களில் நிறமாலையும் சுற்றுவிளகேற்றும் நிகழ்ச்சி டிரஸ்ட் சார்பில் நடைபெற்றன. நாளை (1ம் தேதி) அதிகாலை 3.30 மணிக்கு தெப்பக்குளத்தேரோட்டம், 5.30 மணியளவில் செண்டை மேளம் முழங்க யானைகளின் அணிவகுப்புடன் உற்சவர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றன. 8 மணிக்கு மஞ்சள்நீர் விளையாட்டு, 9 மணிக்கு நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் மஹோத்ஸவம் நிறைவுபெறுகிறது.