திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை உற்ஸவத்தை முன்னிட்டு இரவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து ராப்பத்து உத்ஸவம் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் அத்யான உத்ஸவம் டிச. 23ல் பகல் பத்து உத்ஸவத்துடன் துவங்கியது. தினசரி மாலையில் பெருமாள் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி பூஜைகள் நடந்தது. வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தன்று காலை 10:00 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் உற்ஸவ பெருமாள் உபயநாச்சிமார்களுடன் சயன கோலத்தில் அருள்பாலித்தார். பின்னர் இரவு 7:00 மணிக்கு ராஜாங்க சேவையில் எழுந்தருளி அலங்காரதீபம் நடந்தது. ஏகாந்த அபிேஷகம் ஆகி புறப்பாடாகி தாயார் சன்னதி எழுந்தருளினார். வேத விண்ணப்பங்கள், ஆகம சாஸ்தரங்கள் சொல்லப்பட்டது, பின்னர் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி மங்களாஸாஸனம் நடந்தது. தொடர்ந்து சொர்க்கவாசல் இரவு 10:30 மணி அளவில் திறக்கப்பட்டு தீபாராதனை நடந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பரமபதவாசல் கடந்தார். முன்னதாக ஆழ்வாருக்கு மரியாதை நடந்தது. தொடர்ந்து ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு எதிர்சேவை நடந்தது. பின்னர் ஆழு்வாருக்கு மங்காளாஸாஸனம் நடந்தது. திவ்யபிரபந்தம் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து மும்முறை பத்தி உலாத்துதல் நடந்து. பின்னர் தாயார் சன்னதி எழுந்தருளி காப்புக் கட்டி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ராப்பத்து உத்ஸவம் துவங்கியது. தினசரி மாலையில் பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளல் நடைபெறும்.