அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று தேரோட்டம் நடக்கிறது.
மன்னீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு 7:00 மணிக்கு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர், முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து அருள் பாலித்தார். நேற்று முன் தினம் இரவு பஞ்சமூர்த்திகள் ஐந்து வாகனங்களில் திருவீதியுலா வந்து அருள் பாலித்தனர். நேற்று காலை திருமுறை ஆசிரியர்கள் கண்ணப்பன், தனசொரூபி, திருஞானசம்பந்தம் ஆகியோர் இசையுடன் திருமுறை வாசித்தனர். காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் துவங்கி, மதியம் 1:00 மணிக்கு நிறைவடைந்தது. இதில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தேர்த்திருவிழா உபயதாரர்கள் கவுரவிக்கப்பட்டனர். இன்று காலை 8:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள், கூனம்பட்டி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுக்கின்றனர். மாலையில் திருப்பூர் குழுவின் கும்மி நிகழ்ச்சி நடக்கிறது.