பதிவு செய்த நாள்
03
ஜன
2023
01:01
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நடந்த பகவான் ராமகிருஷ்ணர் குருபூஜை விழாவில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதிகாலை ஹோமம், ஆரத்தி, பூஜையுடன் விழா தொடங்கியது. பெரியநாயக்கன்பாளையம் பஜனை குழு, பாலமலை ரங்கநாதர் பஜனை குழு உள்ளிட்ட குழுக்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. காலை, 7:00 மணி வித்யாலயா கொடியை நாட்றம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சமாஹிதானந்தர் ஏற்றி வைத்தார். கலை, கல்வி பொருட்காட்சியை தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விழாவையொட்டி, மாநில அளவில் நடந்த இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், வித்யாலயா கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை ஸ்ரீ ஸ்கந்த பிரசாத் குழுவினரின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியும், வித்யாலயா கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. மதியம் நடந்த பொதுக்கூட்டத்தில், ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும் என்ற தலைப்பில் சுவாமி சமாஹிதானந்தர், கல்பதருவும் கற்பகவல்லியும் என்ற தலைப்பில் கோவிந்தாபுரம் ஸ்ரீ பாலாஜி பாகவதர் ஆகியோர் பேசினர். மாலை சென்னை திருச்சூர் பிரதர்ஸ் கிருஷ்ணமோகன், ராம்குமார் மோகன் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி நடந்த அன்னதானத்தில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகள் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தா தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.