திட்டக்குடி: திட்டக்குடியில் வதிஷ்டபுரம் அரங்கநாதபெருமாள், திட்டக்குடி சுகாசனபெருமாள், கூத்தப்பன்குடிகாடு வரதராஜபெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வதிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி காலை 4மணி முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. அதிகாலை 5மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதபெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரண்டிருந்த பொதுமக்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். இதேபோல் வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவில், கூத்தப்பன்குடிகாடு ஸ்ரீதேவி,பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இவற்றில் கூத்தப்பன்குடிகாட்டில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசனபெருமாள் கோவிலில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். வதிட்டபுரம் திருமகிழ்ந்த வல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவிலில் பெருமாள் கிடந்த(சயன) கோலத்தில் ஆதிசேஷபடுக்கையில் அருள்பாலிக்கிறார். வைகுண்ட ஏகாதசியையொட்டி, மூன்று பெருமாள் கோவில்களில் அதிகாலை 5மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதையடுத்து பக்தர்கள் மூன்று நிலைகளில் உள்ள பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.