பதிவு செய்த நாள்
06
ஜன
2023
10:01
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த மாதம் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் தேர்த்திருவிழா நடந்தது. தொடர்ந்து, அன்று இரவு தேரில் இருந்து, நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. இன்று அதிகாலை, சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் எழுந்தருள செய்யப்பட்டு மஹா அபிேஷகம் நடந்தது. அப்போது பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஹா அபிேஷகத்தி்ல பங்கேற்றனர். அதையடுத்து, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு திருவாபரண அலங்காரம், சிறப்பு அர்ச்சனைகள் நடந்தன. சித்சபையில் உத்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது. பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவை தொடர்ந்து, மாலை 5:20 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் நடனமாடியமாடி பக்தர்களுக்கு காட்சி கொடுத்த ஆருத்ரா தரிசன விழா நடந்தது. பல்லாயிரக்கணக்கி்ல பக்தர்கள், நமச்சிவாயா கோஷங்கள் முழங்க ஆரவாரத்துடன் தரிசனம் செய்தனர். இன்று (7 ம் தேதி) முத்துப்பல்லக்கு வீதியுலா காட்சி நடக்கிறது. உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர். சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை ஆணையர் அஜிதாபர்வீன் செய்திருந்தார். பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.