சோழவந்தான்: சோழவந்தான் பகுதியில் உள்ள சிவலாயங்களில் மார்கழி திருவாதிரை நட்சத்திர நாளில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. சுவாமி வீதி உலா நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் உள்ள நடராஜர் சிவகாமி அம்பாள் மாணிக்கவாசருக்கு அர்ச்சகர் செந்தில் குமரேசன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை செய்தார். உபயதாரர் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரசேகரன் பிரசாதம் வழங்கினார். நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருடன் வீதி உலா நடந்தது. சோழவந்தான் பிரளயநாயகி சமேத பிரளயநாதர் கோயிலில் அர்ச்சகர்கள் பரசுராமன், ரவிச்சந்திரன், அய்யப்பன் ஆகியோர் கோமாதா பூஜையும், நடராஜர் சிவகாமி அம்பாள் மாணிக்கவாசருக்கு அபிஷேகமும் செய்தனர். உபயதாரர் பா.ஜ., விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா குடும்பத்தினர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். திருவேடகம் ஏலவார் குழலி சமேத ஏடகநாதர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.