பதிவு செய்த நாள்
07
ஜன
2023
09:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், ‘மஹா தீப மை’ சுவாமிக்கு சாத்தப்பட்டு வழிபாடு நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று, ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, சுவாமி சன்னதியிலிருந்து நடராஜர், சிவகாமசுந்தரி புறப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, கடந்த, டிச., 6ல், 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட, மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா தீப மை’ பிரசாதம் முதலில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா...’ என, பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து, திருமஞ்சன கோபுர வாயில் வழியாக நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, பக்தர்கள் வழி நெடுகிலும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.