தஞ்சாவூர், கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில், தைப் பொங்கல் அன்று நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 108 வைணவ தலங்களில் மூன்றாவது திவ்ய தேசமாக சாரங்கபாணி கோவில் திகழ்கிறது. ஏழு ஆழ்வார்களால் பாடப்பெற்றதும், நாலாயிர திவ்வியப்பிரபந்தம் எனும் தமிழ்ப் பாடல் தொகுப்பு கிடைக்கப் பெற்ற தலம். இத்தகைய சிறப்புப் பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பொங்கலன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, வரும் பொங்கல் தினத்தில் நடைபெறும் தைதேராட்டத்தை முன்னிட்டு இன்று காலை (7 ம் தேதி ) கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு முன்பாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து நாளை முதல் 12ம் தேதி வரை வீதியுலாவும், 13ம் தேதி மாலை 5 மணிக்கு சூர்ணாபிஷேகமும், 14ம் தேதி வெண்ணெய்த்தாழி சேவையும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான வரும் 15ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தைப்பொங்கலன்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, ஊழியர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.