ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2023 08:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் நேற்று முதல் துவங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 9:30 மணிக்குமேல் கோயிலில் இருந்து தங்க பல்லக்கில் எழுந்தருளிய ஆண்டாள் மாடவீதிகள் வழியாக ராஜகோபுரம் முன் எழுந்தருளினார். அங்கு போர்வை படி களைந்து திருவடி விளக்கம், அரையர் சேவை நடந்தது. பின்னர் மண்டபங்கள் எழுந்தருளி ரதவீதி சுற்றி மதியம் 1:00 மணிக்குமேல் எண்ணெய்காப்பு மண்டபத்திற்கு ஆண்டாள் வந்தடைந்தார். அங்கு மதியம் 3:00 மணிக்கு மேல் எண்ணெய் காப்பு சேவை, பத்தி உலாவுதல் நடந்தது. இரவு 8:00 மணிக்குமேல் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் புறப்படாகி ரத வீதிகள் வழியாக எழுந்தருளினார். அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், பட்டர்கள் செய்திருந்தனர். ஜனவரி 14 வரை தினமும் காலையில் ஆண்டாள் மண்டபம் எழுந்தருளல், மதியம் எண்ணெய் காப்பு வைபவம், இரவு மூலஸ்தானம் வந்தடைதலும் நடக்கிறது. ஜனவரி 15 அன்று மணவாள மாமுனிகள் மங்களாசாசனம், ஜனவரி 16 அன்று பெரியாழ்வார் சன்னதியில் கனு வைபவம் நடக்கிறது.