பதிவு செய்த நாள்
12
ஜன
2023
10:01
மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் 2023-ஆம் ஆண்டுக்கு உரிய, ‘தேசிய இளைஞர் தினம்’ விழா 2023 ஜனவரி 12-ஆம் தேதி மிகவும் விமரிசையாக நடைபெற்றது. ஜனவரி 12-ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் காலை 6.33 மணிக்கு பிறந்தார். அந்த நேரத்தை முன்னிட்டு மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இருக்கும் சுவாமி விவேகானந்தரின் சிலையின் முன்பு சங்கொலி முழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மதுரை, ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தலைமையில் இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள் 1.சுவாமி சிவயோகானந்தர் (சின்மயா மிஷன், மதுரை) 2.ஸ்ரீமதி பத்மாவதி (செயலாளர், விவேகானந்தா உயர்நிலைப்பள்ளி, சிவகங்கை) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த 12 கல்வி நிறுவனங்களிலிருந்து சுமார் 1000 மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ - மாணவிகள் அனைவருக்கும் விவேகானந்தரின் ‘வீர இளைஞருக்கு...’ என்ற புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தன்னுடைய தலைமையுரையில் பின்வருமாறு கூறினார்: பல்வேறு சிறப்பியல்களுக்கு ஒரு கொள்கலம் போன்று சுவாமி விவேகானந்தர் விளங்கினார். சாதாரண மனிதனும் கூட எழுச்சி பெறும் வகையில் அமைந்த வீரம் ததும்பும் கருத்துக்கள் சுவாமி விவேகானந்தரிடம் உண்டு. வளமான சிந்தனைகளாலும், வளமான செயல்களாலும்தான் வளமான இந்திய சமுதாயம் உருவாகும். இன்றைய இளைஞர்களின் ஒழுக்கமான வாழ்க்கைதான் இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும். நம் உள்ளங்கள் யாவும் ஒன்றாகவே சிந்திக்குமானால் - நம் சிந்தனைகள் யாவும் ஒரே பாதையில் செல்லுமானால் - இந்தியா உயர்வு பெறும் என்பது நிச்சயம். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கரமும் உழைக்க முன்வந்தால், இந்தியா உன்னதமாக உயரும் என்பதில் என்ன சந்தேகம்? உழைப்பின் மீது நம்பிக்கைக் கொண்டவர்களாக இளைஞர்கள் இருக்க வேண்டும். மனிதன் என்பவன் உழைக்கக் கடமைப்பட்டிருக்கிறான். உழைக்க மறுப்பவர்களை வறுமையும், பழியும் வந்தடையும். முன்னேற்றத்தின் கதவுகள் மூடியிருப்பதுமில்லை. முயன்றவர்கள் அதை அடையாமல் இருந்ததுமில்லை.
வாழ்க்கையில் துணிவுடனும், விவேகத்துடனும் செயல் புரிபவர்களாக இளைஞர்கள் திகழ வேண்டும். இந்த உலகில் மனிதன் வாழ்வதற்குரிய முதல் தகுதி ஒழுக்கம். ஒழுக்கம் உள்ளவர்களே உலகில் சிறந்த சாதனைகளைப் படைக்கிறார்கள் - இந்த உண்மையை இளைஞர்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய விஞ்ஞான யுகத்தில் தற்கால இளைஞர்கள் வாழ்க்கையை வளப்படுத்த, முழுமையான தெளிவைப் பெறுவதற்கு உதவும் நூல்கள் சுவாமி விவேகானந்தர் நூல்கள் ஆகும். காளி, ஹனுமான், காலபைரவர் ஆகியோர் உக்கிரமூர்த்திகள்; உள்ளத்தில் வீரம் தோற்றுவிக்கக் கூடியவர்கள். சுவாமி விவேகானந்தர், “இந்திய இளைஞர்கள், இந்தியாவின் எழுச்சிக்கு மகாகர்மயோகியாக விளங்கிய ஆஞ்சனேயரையே தங்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்” என்ற கூறியிருக்கிறார். இரவைப் பகலாக்கி உழைப்பவர்களும் உண்டு; பகலை இரவாக்கி உறங்குபவர்களும் உண்டு.
இந்தியா முன்னேற்றப் பாதையில் வளர்ந்து வரும் ஒரு நாடு. நாம் வாழ வேண்டியவர்கள்; இன்னும் எவ்வளவோ வளர வேண்டியவர்கள். எனவே கனவுலகத் தொழிற்சாலைகளான சினிமா போன்ற கேளிக்கை, களியாட்டங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது மனித ஆற்றலை வீண்விரயம் செய்வதாகும்; மனதின் ஆற்றலை அவை பலவீனப்படுத்தும். மக்களின் உயர்வு ஊக்கத்தையே பொறுத்திருக்கிறது; உள்ளத்தின் உயர்வையே பொறுத்திருக்கிறது. சின்னஞ்சிறு கதைகள் பேசிப் பயனற்ற வாழ்க்கை வாழாமல்-சுகத்திற்கும் வசதிக்கும் இடம் கொடுக்காமல் - சில்லறை ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் - கட்டுப்பாட்டிற்குள் தங்களை வைத்துக்கொள்பவர்களே - உலகில் உயர்ந்து சாதனைகளைப் படைக்கிறார்கள் - புகழ் பெறுகிறார்கள்.
ஊக்கமும் ஆக்கமும் இரட்டைப் பிறப்புகள்; ஒன்று உள்ள இடத்தில் மற்றொன்றும் இருந்தே தீரும்; ஒன்றுடன் ஒன்று இணைந்தே செல்லும். “நீங்கள் இறைவனின் குழந்தைகள். வாருங்கள், வந்து ஏதாவது வீரச் செயலைச் செய்யுங்கள். நீங்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நீங்கள் அனைவரும் மகத்தான காரியங்களைச் சாதிப்பதற்காகப் பிறந்தவர்கள் என்று நம்புங்கள்” என்று, சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டிருக்கிறார். ‘நாம் தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும், திட்டமிட்டு உழைக்க வேண்டும், தொடர்ந்து உழைக்க வேண்டும், தளராத முயற்சியுடன் உழைக்க வேண்டும்’ போன்ற சிந்தனைகள் நமது இளைஞர்களிடம் அமைய வேண்டும். இவ்வாறு தன்னுடைய சொற்பொழிவில் கூறினார்.