பதிவு செய்த நாள்
15
ஜன
2023
06:01
பொங்கலோ பொங்கல்
பொங்கல் என்ற உணவின் பெயரை பண்டிகைக்கும்
வைத்திருப்பது வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் உண்மையை தெரிந்தால் இதன்
நுட்பம் புரியும். ‘பொங்கு’ என்பதில் வேர்ச்சொல் இருந்து வந்தது பொங்கல்.
வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் என எல்லா நலன்களும் நம் இல்லத்திலும்,
உள்ளத்திலும் பொங்கி பெருக வேண்டும் என்னும் சிந்தனையை ஏற்படுத்தும் விழா
இது. இதன் அடிப்படையில் பொங்கல் பானை பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என
சொல்லி ஆரவாரம் செய்வர். அப்போது சுமங்கலிகள் மங்கல ஒலியாக குலவையிடுவர்.
கண் கண்ட தெய்வம்
விநாயகரை வழிபடுவது காணாபத்யம். முருகனை வழிபடுவது கவுமாரம். சக்தி வழிபாடு சாக்தம். சிவனை வழிபடுவது சைவம், திருமாலை வழிபடுவது வைணவம். அது போல சூரியனை வழிபடுவதற்கு சவுரம் என்று பெயர். இந்த வழிபாடுகளில் சூரியன் தவிர மற்ற தெய்வத்தை கண்களால் காண முடியாது. சூரியனை மட்டுமே அன்றாடம் நம் கண்ணுக்கு தெரிவதால் ‘கண் கண்ட தெய்வம்’ என்பது இவருக்கே மிகப் பொருத்தமானதாகும்.
நன்றி சொல்ல வார்த்தையில்லை
காலையில் எழுந்தவுடன் நீராடி விட்டு கீழ்வானில் உதயமாகும் சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்று. இதனை, ‘சூரிய நமஸ்காரம்’ என சிறப்பாக குறிப்பிடுவர். இயற்கை வழிபாட்டில் சூரிய வழிபாடே முதல் வழிபாடு. காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு கணமும் யுகமாக கழிந்தது. பொழுது புலர்ந்த போது, வானில் சூரியன் உதயமாகி ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் நன்றியுடன் வழிபட்டான். இதுவே சூரிய வழிபாட்டின் தொடக்கமாகும்.
சூரிய வம்சம்
அயோத்தியை ஆண்ட மன்னர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சத்தியம், தர்மம், நீதி, நேர்மை தவறாத நல்லவர்கள் பிறந்த குலம் இது. கொடிய துன்ப நிலையிலும் உண்மை மட்டுமே பேசிய அரிச்சந்திரன், ஏழரைச் சனியின் பாதிப்பிலும் வழிதவறாத நளச்சக்கரவர்த்தி, பசுக்களுக்கு வாழ்வளித்த திலீபச் சக்கரவர்த்தி, சத்தியம், தர்ம வழியில் வாழந்து காட்டிய ராமர் ஆகியோர் சூரியகுலத் தோன்றல்களே. கர்ணனும் சூரியனின் பிள்ளையே. சூரியனை வழிபடுவோர் அனைவருக்கும் சூரியகுல மன்னர்களின் ஆசி பூரணமாக கிடைக்கும்.
பலம் தரும் மந்திரம்
“உலகின் இருளைப் போக்கி ஆத்ம பலம் தரும் ஒளிச்சக்தி எதுவோ அதை நமஸ்கரிப்போமாக” என ரிக்வேதத்தில் சூரியன் போற்றப்படுகிறார். காஸ்யப முனிவரின் மகனான சூரியன், வேதங்களில் உள்ள ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாக்கி வான மண்டலத்தில் பவனி வருவதால், ‘சப்தாஸ்தவன்’ எனப்படுகிறார். சூரியனின் தேருக்கு கருடனின் சகோதரன் மாதலியே சாரதியாக உள்ளார். கிரகங்களுக்கு தேவையான சக்தியை அளிப்பவர் சூரியனே. காயத்ரி மந்திர மகிமையால் சூரியன் பலத்துடன் வானில் வலம் வருகிறார்.
அனுமனும் சூரியனும்
அனுமனை சொல்லின் செல்வன் என்பார்கள். அவருக்கு குருநாதராக பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும். ஒருமுறை பழம் என சூரியனை தவறாக கருதிய அனுமன், பூமியில் இருந்து வானத்திற்கு தாவினார். சூரியனின் இயக்கம் தடைபட்டது. இதனால் உலகமே அசையாமல் நின்றது. விஷயத்தை அறிந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் அனுமனின் முகத்தில் ஓங்கியடிக்கவே அவருக்கு தாடை வீங்கியது. அவரது முகம் மாறியதற்கு காரணம் இதுதான். மயங்கிய குழந்தை அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயுபகவான். (வாயு பகவானின் மகனே அனுமன்). கோபமடைந்த வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதனப்படுத்தினர். தன் தவறுக்கு பரிகாரமாக அனுமனுக்கு மந்திர உபதேசம் செய்தார் சூரியன். அன்று முதல் அனுமன் ‘சர்வ வியாகரண பண்டிதன்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். இப்பெருமைக்கு காரணமானவர் அனுமனின் குருநாதரான சூரியனே.
நன்றி செலுத்தும் விழா
நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில், விவசாயத்திற்கு துணைநின்ற சூரியன், மாடு, பணியாட்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விழா பொங்கல். சூரியன் உலகிற்கு ஒளியூட்டுகிறார். கடல் நீரை ஆவியாக்கி மழை பொழியச் செய்கிறார். கிருமிகளை அழித்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுகிறார். மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்பவர் சூரியனே. அவருக்குரிய நாளாக பொங்கல் உள்ளது. சூரியனுக்கு தைப்பொங்கலும், கால்நடைகளுக்கு மாட்டுப்பொங்கலும், உறவினர், நண்பர்களை பாராட்டும் விதமாக காணும் பொங்கலும் உள்ளன.
தை பிறந்தது! வழி பிறந்தது!
சுபநிகழ்ச்சி நடத்தும் நல்லமாதம் தை. பெண்ணை பெற்றவர்கள், “வரும் தையில் கல்யாணத்தை வைச்சுக்கலாம்” என்பது வழக்கம். ஏனெனில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பர். தைமாதத்தில் பெரும்பாலும் அறுவடை முடிந்து விடும். அதனால், உழவர்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் நேரம். கல்யாணச் செலவு செய்வதற்கு வசதியாக இருக்கும் என்பதால் இப்பழமொழி உண்டானது. இதற்கு வேறொரு பொருளும் உண்டு. வயலில் அறுவடை முடிந்தபின் வரப்பு வழியாக எளிதாக நடக்க முடியும். அதையே ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பர்.
ரஸ்மி கூறும் பெயர்கள்
ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என சூரியனுக்கு பல பெயருண்டு. ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் கூறப்பட்டுள்ளன. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்ய கர்ப்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவை
மாதம் முழுக்க மகிழ்ச்சி
தை முழுவதும் கொண்டாட விசேஷ நாட்களுக்கு குறைவில்லை முதல்நாள் தைப்பொங்கல். சூரியனை பொங்கலிட்டு வழிபடுகிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். கால்நடைகளுக்கு பொங்கல் இட்டு நன்றி செலுத்துகிறோம். மூன்றாம் நாள் மஞ்சுவிரட்டு என்னும் வீரவிளையாட்டு நடைபெறும். சில ஊர்களில் ஆறு, கடற்கரையில் உறவினர், நண்பர்களுடன் பேசி மகிழும் காணும் பொங்கல் நடைபெறும்.
மகர ஜோதியாக சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவதும் தையில் தான். தை வெள்ளியன்று விரதம் இருந்து அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றினால் நினைத்தது நிறைவேறும். தைஅமாவாசையன்று தீர்த்தக் கரைகளில் முன்னோர்களை வழிபடுவது சிறப்பு. பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் சேரும் நாளில் தைப்பூச விழா நடக்கும். இந்நாளில் காவடி, பால்குடம் எடுத்து முருகன் கோயில்களில் அபிேஷகம் செய்வர்.