பதிவு செய்த நாள்
16
ஜன
2023
08:01
கோமாதா என்பது ஏன்
தாய் நமக்கு பிறவியைக் கொடுத்தவள். அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பது போல இன்னும் ஒரு தாய்க்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். உயிரோடு இருக்கும் வரை பால் கொடுத்து உதவும் பசு தான் அது. பசுவைக் கண்டால் அன்பும், கருணையும் மனதில் ஊற்றெடுக்கும். மற்ற பிராணிக்கு இல்லாத சிறப்பாக பசு மட்டுமே அம்மா என குரல் எழுப்பும். குழந்தையாக இருக்கும் போது மட்டுமே தாய் நமக்கு பாலுாட்டுவாள். ஆனால் நம் வாழ்நாள் முழுக்க பசு பால் தருகிறது, அதனால் கோமாதா என பசுவை அழைக்கிறோம்.
மரம் போல மாடும் இருக்கணும்!
பசுவின் சாணத்தை கோமயம் என்பர். பொதுவாக மிருகத்தின் மலத்தால் நோய்கள் பரவும். ஆனால் பசுவின் சாணம் மட்டும் கிருமி நாசினியாக உள்ளது. அந்தக் காலத்தில் மண்வீட்டை சாணத்தால் மெழுகுவர். வாசல் தெளிக்கவும் சாணம் கரைத்த நீரையே தெளிப்பர். இதனால் வீட்டுக்குள் பூச்சி, நோய்க்கிருமி அண்டாது. வீட்டில் பசு இருந்தால் அந்த வீட்டிற்கு மகாலட்சுமி தேடி வருவாள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பது போல மாடு ஒன்றும் இருப்பது அவசியம்.
கீரை கொடுத்தா கல்யாணம்
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் பலமின்றி நீச்சமாக இருந்தால் திருமணத்தடை, குடும்பத்தில் ஒற்றுமையின்மை உண்டாகும். முற்பிறவியில் பசு சாபம் இருப்பவருக்கு இந்த தோஷம் வரலாம். இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு அகத்திக்கீரை, புல், பழங்கள் கொடுப்பதன் மூலம் விமோசனம் கிடைக்கும். அப்போது கோக்ராஸ ஸ்லோகம் என்னும் பசு ஸ்லோகம் சொல்வது நல்லது. இதன் பொருளைச் சொன்னாலும் புண்ணியமே!
“ஸௌரபேய்ய: ஸர்வ ஹிதா:
பவித்ரா: புண்யராஸய:!
ப்ரதி க்ருண்ணம் த்விமம் க்ராஸம்
காவஸ் த்ரைலோக்கய மாதா:!
“காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை தருபவளே! பரிசுத்தமானவளே! புண்ணியம் மிக்கவளே! மூவுலகிற்கும் தாயாகத் திகழ்பவளே!
இந்த புல்லை உண்டு மகிழ்வாயாக!” என்பது இதன் பொருள்.
பின்னர் பசுவை மூன்று முறை வலம் வந்து,
“கவாமங்கேஷு திஷ்டந்தி
புவனானி சதுர்தஸ!
யஸ்மாத் தஸ்மாச் சிவம் மே ஸ்யாத்
இஹலோகே பரத்ர ச!! என்று சொல்ல வேண்டும்.
“பசுத்தாயே! உன் மேனி முழுவதும் எல்லா உலகங்களும் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த பூலோகத்திலும், பரலோகத்திலும் எனக்கு மங்களத்தை அருள்செய்வாயாக என்பது
இதன் பொருள்.
இந்த நாள் நல்ல நாள்
காலையில் எழுந்ததும் பசுவை பார்த்தால் நாள் முழுவதும் நல்ல நாளாக அமையும். நல்ல விஷயமாக வெளியில் கிளம்பும் போது கன்றுடன் கூடிய பசுவைக் கண்டால் வெற்றி கிடைக்கும். பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும். மாட்டுக் கொட்டில் இருக்கும் வீட்டில் தெய்வ அருள் நிறைந்திருக்கும். கொட்டிலுக்கு கோஷ்டம் என்று பெயர். கோயிலில் மூலஸ்தான சுற்றுச்சுவரை கோஷ்டம் என்பர். கோஷ்டத்தைக் காட்டிலும் பரிசுத்தமான இடம் வேறில்லை.
அங்கு மந்திரம் ஜபித்தால் அதன் நன்மை கோடி மடங்காக இருக்கும்.
பெண்களே...மனசு வையுங்க!
பால் சுரக்கும் கறவைக் காலத்தில் பசுவுக்கு நேரத்திற்கு சரியாக புல், புண்ணாக்கு, தவிடு என ஆகாரம் அளிப்பர். வயதான பின் கறவை நின்றதும் உணவளிக்காமல் விட்டு விடுவர். இதனால் பெரும் பாவம் உண்டாகும். பெண்கள் நினைத்தால் இந்த வயதான பசுக்களைப் பாதுகாக்க முடியும். சமைக்கும் போது காய்கறிகளில் உள்ள தோல், வேண்டாத கழிவுகளைச் சேகரித்து பசுக்களுக்கு உணவாக கொடுக்கலாம். இதனைச் சேகரிக்கும் பணிகளில் சமூகசேவை நிறுவனங்கள் ஈடுபட்டால் பலன் எளிதில் கிடைக்கும். இதன் மூலம் கோபால கிருஷ்ணனின் அருளைப் பெறலாம் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
மந்திரப்பாட்டு
மதுரை மன்னரான கூன் பாண்டியனின் வெப்புநோயைப் போக்க ஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். இதை படிப்பவர்களிடம் மந்திரமோ, தந்திரமோ எடுபடாது. ஏனெனில் திருநீறே சிறந்த மந்திரமாகவும், தந்திரமாகவும் உள்ளது என்கிறார் ஞானசம்பந்தர்.
புழுதி பட்டால் புண்ணியம்
பசுவின் குளம்படி பட்ட புழுதிக்கு கோதுாளி என்று பெயர். பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது புழுதிப்படலம் கிளம்பும். அது நம் உடம்பில் பட்டாலே முன்வினை பாவம் தீரும். புனித நதிகளில் நீராடிய புண்ணியம் சேரும்.
மஹாபெரியவரின் பிரார்த்தனை
அந்தணருக்கு பசு தானம் செய்வதால் கொடிய பாவமும் மறையும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பசுவை தானமாகப் பெறுபவர் அதனைப் பாதுகாப்பாரா என உறுதிப்படுத்துவது அவசியம்.
எங்கு பசுக்கள் பயமின்றி நிம்மதியாக மூச்சு விடுகிறதோ அங்கு பாவம் நீங்கி நாடே ஒளி பெற்றுத் திகழும் என்கிறார் சியவன மகரிஷி. அந்த நல்ல நிலையை உலகம் அடைய கிருஷ்ணர் அருள்புரியட்டும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
நிறமும் குணமும்
பசுக்களின் நிறத்திற்கு ஏற்ப அதன் குணமும் மாறுபடும் என்கிறார் வாரியார். கரிய நிறம் கொண்ட காராம்பசு தெய்வீக குணம் மிக்கது. இதன் பால் வாதநோய் போக்கும். இந்த பசுவைக் கபிலா என்றும் சொல்வர். அபிஷேகம், ஹோமத்திற்கு இதன் பால் உகந்தது. மஞ்சள் நிறம் கொண்ட பசுவின் பால் பித்தநோய் போக்கும். வெண்ணிறப் பசுவின் பால் அமைதி, நற்குணம் தரும். சிவப்பு, பலவண்ணம் கொண்ட பசுவின் பாலைக் குடிக்க வாயுத்தொல்லை தீரும். கன்று ஈன்ற பசுவின் பாலை 16 நாட்களுக்கு குடிக்கக் கூடாது.
தங்கச்சி பசு
அம்பிகைக்கு கோமாதா என்றும் பெயர் இருப்பதாக லலிதா சகஸ்ர நாமம் கூறுகிறது. சில கோயில்களின் தலவரலாற்றில் அம்பிகை பசு வடிவில் தோன்றி சிவபெருமானை வழிபட்டதாக கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் பசுவின் பெயரால் கோமதி அல்லது ஆவுடை என அம்மன் அழைக்கப்படுகிறாள். கோ என்றாலும், ஆ என்றாலும் பசு என்றே பொருள்படும் அம்பிகையின் சகோதரரான மகாவிஷ்ணு பூமிக்கு வந்து பசுவின் வடிவில் இருந்த தங்கையைப் பாதுகாத்து சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைத்ததாகச் சொல்வர்.
ஒரே நிமிடத்தில் உலகைச் சுற்றலாம்
நாடு முழுவதும் புனிதமான கோயில்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை தரிசிக்க நம் வாழ்நாள் போதாது. புனித நதிகள், கடல்களும் நிறைய உண்டு. இவற்றில் நீராடவும்
நமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இந்த புண்ணிய பலனை எளிதாக அடைய ஒரே வழி பசுவை வணங்குவது தான். பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். புண்ணிய தீர்த்தங்கள், மலைகளும் அடங்கியுள்ளன. பசுவை வலம் வந்து வணங்கினால் உலகை சுற்றி வந்த புண்ணியம் ஒரே நிமிடத்தில் கிடைத்து விடும்.