அன்னூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அன்னூர் வட்டாரத்தில், கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
எல்லப்பாளையம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று விநாயகர் பூஜையுடன் திருவிழா துவங்கியது. கோவில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்மனுக்கு பொங்கல் இட்டு வழிபாடு செய்தனர். காலை 9:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தலும், மதியம் சிறப்பு பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கத்தியால், தங்களது கைகளின் பக்கவாட்டில் கீறிக்கொண்டு திசுக்கோ, வேசுக்கோ என்று அம்மனை வழிபட்டனர். சிறப்பு பஜனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னூரில் பழமையான பெரியம்மன் கோவிலில், காலை 11:00 மணிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேக பூஜையும் மதியம் அலங்கார பூஜையும் நடந்தது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் மற்றும் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.