நாட்டரசன் கோட்டையில் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் : குவிந்த வெளிநாட்டினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2023 08:01
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் நடந்த பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழாவில் நகரத்தார் ஒன்றாக 914 பானைகளில் பொங்கல் வைத்தனர்.
தை பிறப்பிற்கு அடுத்து வரும் செவ்வாய் அன்று நாட்டரசன்கோட்டை நகரத்தார்கள் கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபடுவர். நேற்று செவ்வாய் பொங்கலை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் வசிக்கும் நகரத்தார் கூடினர். கண்ணுடைய நாயகி அம்மன் முன் குடவோலை முறையில் வெள்ளி குடத்தில் குடும்பத்தலைவர்களின் பெயர்களை சீட்டு எழுதி போட்டு எடுத்தனர். அதில் நாட்டரசன்கோட்டை எஸ்.திருஞானமூர்த்தி பெயர் வந்ததால் அவர் முதல் பொங்கல் பானை வைத்து பொங்கலை துவக்கினார். முதல் பெயர் வந்த குடும்பத்தினர் மட்டும் முதல் பானையாக மண்பானையில் பொங்கல் வைத்தனர். மாலை 4:45 மணிக்கு நகரத்தார் (புள்ளிகள்) 914 குடும்பத்தினர் ஒன்றாக முற்றிலும் வெண்பொங்கல் வைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்றிரவு கண்ணுடைய நாயகி அம்மனுக்கு ஆடு பலியிட்டு வழிபாடு நடத்தினர்.
வெளிநாட்டினர் வருகை: இவ்விழாவை காண பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 60 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வரவேற்றார். அனைவரும் மாட்டு வண்டியில் அமர்ந்து நாட்டரசன்கோட்டை நகரத்தார் வீடுகளை வியப்புடன் பார்த்து ரசித்தனர். சுற்றுலா துறை சார்பில் கலைநிகழ்ச்சி நடந்தது.