பதிவு செய்த நாள்
18
ஜன
2023
12:01
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திம்மசமுத்திரம் கிராமத்தில் நடந்த பார்வேட்டை உற்சவத்திற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று திம்மசமுத்திரம் பகுதியில் நடக்கும் பார்வேட்டை உற்சவத்திற்கு செல்வார். இந்த ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்காக காலை 8:30 மணிக்கு கோவிலில் இருந்து ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி சமேதராக புறப்பட்டு சென்றார். சுவாமி ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவனடியார்கள் பங்கேற்றனர். ஏகாம்பரநாதர் செல்லும் வழிகளில் பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து தரிசனம் செய்தனர். மதியம் 12:30 மணிக்கு சுவாமி திம்மசமுத்திற்கு சென்றடைந்தார். அங்கு ஒவ்வொரு தெருவிலும் வீதிவுலா நடைபெற்றது. மதியம் 2:00 மணிக்கு அப்பகுதியில் அமைந்துள்ள திரிபுராந்தகேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளினார். மாலை 4:31 மணிக்கு ஏகாம்பரநாதருக்கு வாசனை திரவியங்கள், பால், தயிர், கரும்புசாறு, இளநீர், பழங்கள், தேன், சந்தனம், திருநீறு, பன்னீர் ஆகியவற்றை கொண்டு மஹா அபிேஷகம் நடந்தது. இதையடுத்து பக்தர்கள் தரிசனம் நடந்தது. இரவு 8:30 மணிக்கு உபசார தீபாராதனை முடிந்ததும் ஏகாம்பரநாதர் திம்மசமுத்திரம் கிராமத்தில் இருந்து புறப்பட்டு இரவு 11:00 மணிக்கு கோவிலை சென்றடைந்தார். lஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைணவ மகான் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டு தோறும் காணும் பொங்கல் விழாவின் போது பாரிவேட்டை உற்சவம் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு பாரிவேட்டை உற்சவம் நேற்று நடந்தது. ஆதிகேசவர், ராமானுஜர் கோவிலில் இருந்து நேற்று காலை 11.00 மணிக்கு புறப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதுாரில் எட்டு இடங்களில் மண்டகபடி கண்டருளி ஸ்ரீபெரும்புதுார் வி.ஆர்.பி.,சத்திரம் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு ஆதிகேசவர் குதிரை வாகனத்திலும், ராமானுஜர் பல்லக்கிலும் எழுந்தருளி வாண வேடிக்கையுடன் கோவிலை சென்றடைந்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.