பதிவு செய்த நாள்
19
ஜன
2023
10:01
பழநி: பழநி மலை முருகன் கோயிலில் ஜன.27ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் சன்னதி விமானம், ராஜகோபுரத்தில் தங்க கலசங்கள் பொருத்தப்பட்டன.
இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணி முதல் பாரவேல் மண்டபத்தில் தங்க கலசங்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. கோபுர தங்க கலசங்களில் பாதயாத்திரை பக்தர்கள், அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர்கள், இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் லட்சுமி, பணியாளர்கள் நவதானியங்களை நிரப்பினர். அதன்பின் மேளதாளங்கள் முழங்க தங்க கலசங்களை கோயில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் வழியே எடுத்துவரப்பட்டு ராஜ கோபுரம் , கோயில் சன்னதி விமானங்களில் பொருத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. அப்போது கருடன் கோபுரத்தின் மேல் வலம் வந்தது. பக்தர்கள் ஓம் முருகா கோஷத்துடன் தரிசித்தனர்.
பூர்வாங்க பூஜைகள்: பழநி மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணிக்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று துவங்கின. இக்கோயில் படிப்பாதை கோயில்களுக்கு ஜன.26 , மூலவர் சன்னதியில் ஜன.27 லும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் நேற்று துவங்கின. மாலை 4:00க்கு சாயரட்சை பூஜை , கணபதி, சிவனிடம் அனுமதி பெறுதல், திருவொளி வழிபாடு, திருநீறு திருவமுது வழங்குதல் நடந்தது. தமிழ் ஓதுவார்கள் ,வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்கினர்.