பதிவு செய்த நாள்
19
ஜன
2023
05:01
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த13-ந் தேதி முதல் தாயார் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவ முதல் நாளட நிகழ்ச்சியுடன் தொடங்கி வருகிற 22ந் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. இதில் பகல் பத்து உற்சவம் 5 நாட்கள் நடைபெற்றது. இந்த திருநாட்களில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே இரண்டாயிரம் திருவாய்மொழி பாசுரங்களை தினமும் மாலையில் கேட்டருளினார். இதைத் தொடர்ந்து இராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித் முதல் திருநாள் நேற்று18ம் தேதி தொடங்கியது. உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியார் சவுரிக் கொண்டை, அர்த்த சந்திரா, நெற்றிச்சரம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், பருத்திக்காய் காப்பு மாலை, 5 வடம் முத்துச்சரம், பங்குனி உத்திரப் பதக்கம், அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்களை அணிந்து திருவாய்மொழி மண்டபத்தில் எழுந்தருளினார். முன்னதாக மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் திருவாய்மொழி மண்டபத்தை வந்தடைது அலங்காரம், கோஷ்டி வகையறா கண்டருளி திருவாய்மொழி பாசுரங்களை கேட்டருளினார். பின்னர் இரவு 8.30 மணிககு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.