மயிலாடுதுறை: தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் சொக்கநாத பெருமானுடன் குருலிங்க சங்க பாதயாத்திரை புறப்பட்டார். வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் பூஜாமூர்த்தியான சொக்கநாத பெருமானை வழிபட்டுவருகின்றனர். குருமகா சந்நிதானங்கள் வெளியூர்களுக்கு யாத்திரை செல்லும்போது பூஜாமூர்த்தியான சொக்கநாத பெருமானை எடுத்துசெல்வது வழக்கம். அதேபோல் கடந்த ஆண்டு வைத்தீஸ்வரன்கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகங்களின் போது தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் சொக்கநாத பெருமானுடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையாக புறப்பட்டு சென்று கும்பாபிஷேக விழாக்களை நடத்தினார். அதேபோல் பேரளம், திருவாவரூர், திருக்குவளை கோயில்கள் கும்பாபிஷேகவிழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று 23ம் தேதி மாலை சொக்கநாதபெருமானுடன் தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் குருலிங்க சங்கம பாதயாத்திரையாக புறப்பட்டார். தருமபுரம் ஆதீனம் நான்கு வீதிகளிலும் வீடுகள் மற்றும் ஆதீன கல்வி நிறுவனங்களில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மயிலாடுதுறை தைக்கால்தெரு பள்ளிவாசல் அருகே குருலிங்க சங்க யாத்திரை வந்தபோது பள்ளிவாசல் ஜமாத்தார்கள் தருமை ஆதீனத்திற்கு சால்வை அணிவித்து சொக்கநாத பெருமானுக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நகராட்சி அலுவலக வாயிலில் நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் கவுன்சிலர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு சென்று தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் வழிபாடு நடத்தி இரவு கழனிவாசல் கிராமத்தில் சொக்கநாத பெருமானை எழுந்தருள செய்தார். இன்று 24ம் தேதி மாலை 4 மணிக்கு கழனிவாசலில் இருந்து புறப்பட்டு பேரளம் பவானியம்மை சமேத சுயம்புநாதசுவாமி கோயிலுக்கு சென்றடைகிறார். உடன் திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான்சுவாமிகள் மற்றும் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.