பதிவு செய்த நாள்
24
ஜன
2023
08:01
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் ஏழாவது நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது. இதற்காக, அதிகாலை, உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தருளினார். காலை 7:00 மணியளவில், தேர் புறப்பாடு நடைபெற்றது. ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக தேர் இழுக்கப்பட்டு, குளக்கரை தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. வழியெங்கும் பக்தர்கள் கூடி, வீரராகவா, கோவிந்தா சரணம் முழங்க பெருமாளை வழிபட்டனர். தேரில் மாலை வரை அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், திருமஞ்சனம் நடந்த பின், கோவிலுக்குள் பெருமாள் இரவு திரும்பினார். பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான, இன்று மாலை, திருப்பாதம் சாடி திருமஞ்சனம், இரவு, குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.