பதிவு செய்த நாள்
24
ஜன
2023
04:01
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் வடக்கு டிவிஷனில் உள்ள துண்டுக்கருப்பராய சுவாமி, மகாமுனீஸ்வரர் சுவாமி, உச்சிகாளியம்மன் கோவிலின், 140ம் ஆண்டு விழா கடந்த , 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு நடுமலை தெற்கு பிரிவு கணபதி கோவிலில் நெய்வேத்திய பூஜை நடைபெற்றது. நள்ளிரவு, 1:00 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளிய துண்டுக்கருப்பராயர் சுவாமியை, அதிகாலையில் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை , துண்டுக்கருப்பராயர், மகாமுனீஸ்வரர் சுவாமிக்கு, 9:00 மணிக்கு பொங்கல் பூஜை, நெய்வேத்தியம் நடந்தது. காலை , 11:00 மணிக்கு சூலுார் மற்றும் கொளப்பலுார் பூசாரிகள் தலைமையில் உச்சிகால பூஜை மற்றும் கிடாவெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்னதான விழாவை, எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கவுன்சிலர் அன்பரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். வால்பாறை நகர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.