பதிவு செய்த நாள்
25
ஜன
2023
11:01
ஓசூர்: ஓசூரில், மரகதாம்பிகை அம்மனின் புதிய தேருக்கான சக்கரங்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை வழங்காமல், தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீது மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலின், 600 ஆண்டுகள் பழமையான மரகதாம்பிகை தேர், மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், கோவில் தேர் கமிட்டி சார்பில், 14 அடி உயரத்தில், 40 டன் எடையில், புதிய தேர் செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் கோரப்பட்டது.
கடந்தாண்டு ஏப்., 7ல் அனுமதி வழங்கப்பட்டது. தேர் சக்கரங்கள் செய்ய, ஹிந்து சமய அறநிலையத்துறை, 3.69 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில், 60.31 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் செய்யும் பணி கடந்தாண்டு ஜூன், 3ல் துவங்கியது. திருவாரூரில் கடந்த, 2010ல் ஆழி தேரை புதிதாக செய்த இளவரசன் என்பவரிடம், தேர் பணி ஒப்படைக்கப்பட்டது. தேர் பணிக்கு, இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை செலவாகி உள்ளது. இன்னும் சில வாரங்களில் பணி முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ப்பணியை நேற்று பார்வையிட்ட கோவில் தேர் கமிட்டி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மனோகரன், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வரும் மார்ச், 7ல் கோவில் தேரோட்டம் நடக்கிறது. அதற்கு முன்பாக புதிய தேரை வெள்ளோட்டம் விட வேண்டும். ஆனால், ஹிந்து சமய அறநிலையத்துறை, இதுவரை தேர் சக்கரங்களை வழங்கவில்லை. எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தேர் சக்கரங்களை வழங்கி, தேர் வெள்ளோட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்,’’ என்றார்.