பதிவு செய்த நாள்
25
ஜன
2023
12:01
திண்டுக்கல் : திண்டுக்கல் பழநி மலை முருகன் கோயிலில் ஜன.27ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் கோயில் ராஜகோபுரம்,தங்க கோபுரங்கள் உள்ளிட்ட கோயில் பிராகாரங்களில் உள்ள சிற்பங்களுக்கு வர்ணம் பூசுதல், சீரமைத்தல், அழகு படுத்துதல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கும்பிஷேகத்தன்று இரண்டு லட்சம் பக்தர்களுக்கு கோயில் பிரசாதம் வழங்குவதோடு,பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 10 ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்கவும் ,ஹெலிகாப்டர் மூலம் கும்பாபிஷேக கோபுரத்திற்கு மலர் துாவவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் பழநி மலை முருகன் கோயிலில் பல ஆண்டுகளுக்கு பின் ஜன.27ல் மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் மூலவர் தரிசனம் காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோயில் வேள்விசாலையில் எழுந்தருளி உள்ள சுவாமியை பதக்தர்கள் வணங்கி செல்கின்றனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோயிலை சீரமைக்கும் பணியை பல மாதங்களுக்கு முன்னதாக தொடங்கினர்.ராஜகோபுரம்,தங்ககோபுரம் கோயில் உள்பிரகாரங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் கோலம் ,பெயிண்ட் அடிப்பது என்பன உள்ளிட்ட பணிகளில் நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கும்பாபிஷேகத்தை காண ஆன்லைனில் விண்ணப்பித்த பொது மக்களுக்கு 2000 பேருக்கு குலுக்கல் முறையில் அனுமதி வழங்கப்பட்டது.
6 ஆயிரம் பேர்: இவர்கள் ஜன.27 அன்று காலை 8:00 மணிக்கு கோயிலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கும்பாபிேஷகத்தன்று அனுமதி பக்தர்களுடன் 6ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பாஷேகத்தன்று ராஜகோபுரம், தங்ககோபுரத்தில் உள்ள கும்ப கலசங்களுக்கு அபிஷேகம் செய்வதற்கு வசதியாக தற்காலிக இரும்பு படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.அங்கு யாரும் செல்லாத வகையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கும்பாபிேஷகத்தன்று பக்தர்கள் பாதுகாப்பிற்காக 10 ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலின் உள் பகுதி வெளி பகுதிகளில் 150 கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.படிப்பாதையிலும் பெயிண்ட் அடிப்பது, சுத்தம் செய்யும் பணிகளும் நடக்கிறது. பக்தர்கள் வந்து செல்வதற்கு தற்காலிகமாக தாராபுரம் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகளும் நடக்கிறது. குற்ற செயல்களை தடுக்க மப்டியில் ஆண் ,பெண் என 300 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதோடு பாதுகாப்புக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் வரவழைக்கப்பட உள்ளனர்.
மூன்று இடங்களில் அன்னதானம்: கிரிவீதி கோயில் விடுதி வளாகங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கிரி வீதி, குடமுழுக்கு மண்டபம் பகுதிகளில் நிழல் கூரை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் ஜன.27 ல் கிரிவீதியில் உள்ள கோசலை வளாகம், பழைய நாதஸ்வர பள்ளி, குடமுழுக்கு நினைவு அரங்கம் பகுதிகளில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல். இ. டி., திரைகள், டிவிகள் வைக்கப்பட்டு கிரிவீதி, சன்னதி வீதி பகுதியில் இருக்கும் பக்தர்களும் கும்பாபிஷேகம் தரிசிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
ஹெலிகாப்டர் மூலம் கும்பாபிஷேக கோபுரத்திற்கு மலர் துாவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிரி விதி , மலைமீது உள்ள பக்தர்கள் மீது கும்பாபிஷேகம் நீர் தெளிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்க ஒரு வழிப்பாதை, கூடுதல் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளன. பஞ்சு,காவி,சுக்காம்பாறை உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளை அறைத்து மாவாக மாற்றி அங்குள்ள 240 சுவாமி சிலைகளுக்கு மருந்து சாத்துதல் நடந்து வருகிறது. மூலிகைகளை அறைக்கும் பணியில் திருச்சி, முசிறி பகுதி பெண்கள் ஈடுபடுகின்றனர். கும்பாபிஷேகத்தால் பழநி சுற்று ப்பகுதிகளில் செயல்படும் அரசு விடுதிகள்,தனியார் விடுதிகள் நிரம்ப ஆரம்பித்துள்ளது. மணிகண்டன்,பந்தல் தொழிலாளி, கும்பகோணம்: 20 நாட்களாக பழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.80 சதவீத பணிகள் நடந்து முடிந்துள்ளது.ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு அபிஷேகம் செய்வதற்காக தற்காலிக படிக்கட்டுகள் அமைத்து அனை வருக்கும் தெரியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கோயிலில் இப்பணி எனக்கு இது முதல் முறை என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது.இதை பாக்கியமாக கருதுகிறேன்.
சிவக்குமார், தொழிலாளி, பாபநாசம்: நான் பல முறை கோயிலுக்கு வந்திருக்கிறேன். தற்போது வேலைக்காக வந்திருக்கிறேன்.ராஜ கோபுரம்,தங்க கோபுரம்,கோயில் உள் பிரகாரங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பந்தல் வேலைகள் செய்து வருகிறோம். ஆர்வமாக செய்கிறோம். மக்கள் கூட்டம் அதிகம் வரும் பழநியில் நாங்கள் இருப்பது எங்களுக்கு பூரிப்பாக உள்ளது. இந்த வாய்ப்பு எங்களுக்குகடவுள் தந்த வரமாக உள்ளது. வளர்மதி, அஷ்ட பந்தணம் தயாரிக்கும் பெண்,முசிறி: சுவாமிகளுக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சியில் என்னுடைய பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக பல கோயில்களில் இது போல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.பழநி கோயிலுக்கு 300 கிலோ அஷ்ட பந்தணம் மருந்து தேவைப்படுகிறது. இக்கோயிலில் அதிக சிலைகள் உள்ளதால் 3 நாட்களுக்கு மேலாக பணிகள் நடந்து வருகிறது.இவை அனைத்தும் மூலிகை பொருட்களால் ஆனது.
ஜெயராமன், பக்தர், கேரளா: நான் கேரளாவில் இருந்து நேர்த்திகடன் செலுத்த குடும்பத்துடன் வந்தேன்.கும்பாபிஷேகம் நடப்பது தெரியும்.ஆனால் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்பது தெரியாது.இன்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை.அதனால் மன வருத்தமாக உள்ளது.அதனால் நடை பாதை வழியாக நடந்து சென்று என் வேண்டுதலை நிறைவு செய்தேன்.
ராஜசேகர், பழநி: எங்கள் சமூகத்தின் சார்பில் பழநி மலை முருகன் கோயிலில் 2 மண்டகபடி நிகழ்ச்சி நடத்துகிறோம்.ஆனால் எங்களுக்கு கும்பாபிஷேக அழைப்பு இன்னும் வரவில்லை. அது மட்டுமின்றி எங்கள் சமூகத்தின் ஆதினத்தை கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதற்காக அனுமதி கடிதம் கேட்டிருக்கிறோம்.அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.உள்ளூர் காரர்களான எங்களுக்கே அனுமதியில்லை என்பது மிக வருத்தமாக உள்ளது. நடராஜன், இணை ஆணையர்,பழநி மலை முருகன் கோயில்:கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடக்கிறது. கும்பாபிஷேகத்தன்று 2 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது, என்றார்.