பதிவு செய்த நாள்
27
ஜன
2023
05:01
சாலைகிராமம்: சாலைக்கிராமம் அருகே ராதாப்புலி கிராமத்தில் செல்வ விநாயகர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாலைக்கிராமம் அருகே உள்ள ராதாப்புலி கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கும்பாபிஷேக விழாவிற்காக கோவிலில் முன் மண்டபங்கள் புதிதாக கட்டப்பட்டு கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த 25ம் தேதி முதலாம் கால யாகசாலை பூஜையுடன், விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, விக்கிரக வழிபாடு, கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்று, 26ம் தேதி 2ம் கால பூஜையும், விழாவின் முக்கிய நாளான இன்று காலை 3ம் கால பூஜை, கோ பூஜை, நாடி சந்தனம் நடைபெற்று, சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை ஊர்வலமாக கொண்டு சென்று காலை 9:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.பின்னர் செல்வ விநாயகருக்கு 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராதாப்புலி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் குடும்பத்தினர் செய்திருந்தனர். விழாவில் ராதாப்புலி, கோபாலபட்டிணம், முத்துப்பட்டிணம், சாலைக்கிராமம், வலசைக்காடு, உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்நத பக்தர்கள் கலந்து கொண்டு செல்வ விநாயகரை வழிபட்டு சென்றனர்.