வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2023 08:01
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் எங்கும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்களால் இங்கு திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு 88 ஆவது ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் மாலை விரதம் இருந்து பக்தர்கள் கோவில் நிலை மாலையுடன் தங்களது வீடுகளில் இருந்து தேங்காய், பழம், பூக்கள் ஏந்திய தட்டுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. பின்னர் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் சுவாமிக்கு பலியிடப்பட்டு அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பிரியாணி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் கள்ளிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.