மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் முகூர்த்தகால் ஊன்றும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2023 08:01
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு முகூர்த்தக்கால் ஊன்றும் விழா கோலாகலமாக நடந்தது.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையான கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் மஞ்சளாற்றில் குளித்து கோயிலில் அம்மனை வணங்குவர். தினமும் மாலை 6:00 மணிக்கு உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடக்கும் சாயரட்சை லட்சதீபம் பூஜையில் பக்தர்கள் உத்தரவு கேட்பது வழக்கம். தீபாராதனைக்கு முன்பு தேங்காய் உடைக்கப்படுவதில்லை. வாழைப்பழம் உரிக்கப்படுவதும் இல்லை. இரவு, பகல் அணையாத நெய்விளக்கு எரிகின்றது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் அம்மனை குல தெய்வமாக நினைத்து ஏராளமான பக்தர்கள் வணங்கி வருகின்றனர். பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் வழங்குவதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாசி மகாசிவராத்திரி திருவிழா: பிப்., 18 முதல் பிப்., 25 வரை எட்டு நாட்கள் மாசி மகாசிவராத்திரி திருவிழா கோலாகலமாக நடக்கும். திருவிழா துவங்க உள்ளதை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்க முகூர்த்தக்கால் ஊன்றும் விழா நடந்தது. மாவிளக்கு, பொங்கல் வைத்து அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் தனராஜ் பாண்டியன், கனகராஜ் பாண்டியன் மற்றும் செயல் அலுவலர் வேலுச்சாமி செய்து வருகின்றனர்.