திக்கணங்கோடு: புங்கறை பத்திரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா, 50வது வருடபஜனை பட்டாபிஷேகம், 43 வது வருட அம்மன் கொடை விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் கடந்த 20ம் தேதி கொடியேற்றுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. 10ம் திருவிழா நேற்று முன்தினம் 50வது பட்டாபிஷேக விழா நடந்தது. பூவினால் அலங்கரிக்க பட்ட சப்பரத்தில் கிருஷ்ண பகவானும், 3 யானைகளில் கணபதி , பத்ரகாளிம்மன், அய்யப்ப சுவாமி வீதி உலா எழுந்தருளல் பவனி நடந்தது. பவனி நங்கச்சி விளை, பூக்கடை , பருத்திக்காட்டுவிளை, கோழிப்போர்விளை, அமராவதி வழியாக முகமாத்தூர் ஸ்ரீ கண்டன்சாஸ்தா ஆலயம் சென்று மல்லன்விளை வழியாக பகல் கோவிலை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையை தொடர்ந்து திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் ஒன்று கூடி பஜனை பாடல் பாடி மங்கள பிரார்த்தனை செய்தனர். ஊர்வலம் சென்ற பாதையில் வீடுகள் முன் கோலமிட்டு விளக்கேற்றி வரவேற்றனர். பவனியில் நாதஸ்வரம் சிங்காரிமேளம் கரகாட்டம் தப்பாட்டம் நாசிக்டோல் இசையுடன் பக்தர்கள் பஜனை பாடி சென்றனர். ஏற்பாடுகளை ஊர் தலைவர் முருகராஜன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.