பதிவு செய்த நாள்
01
பிப்
2023
05:02
அன்னூர்: சாலையூர், பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழாவில், 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னூர் அருகே சாலையூரில், 2,000 ஆண்டுகள் பழமையான பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. 30 ம் தேதி விமான கலசங்கள் நிறுவப்பட்டன. 31ம் தேதி விநாயகர், கதிர்காம வேல், சித்தர்கள் உள்ளிட்ட மூர்த்திகளுக்கும், மூலவரான பழனி ஆண்டவருக்கும் எண்வகை மருந்து சாற்றப்பட்டது. மாலையில் அனுபூதி கச்சேரி நடந்தது. இன்று காலை 6:45 மணிக்கு பாத விநாயகர், கதிர்காம வேல், சித்தர்கள், இடும்பன், கடம்பன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சண்முகா அர்ச்சனை நடந்தது. காலை 9:55 மணிக்கு, விமான கலசங்களுக்கும், பழனி ஆண்டவருக்கும் புனித நீர் ஊற்றி சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கும்பாபிஷேகம் செய்து வைத்தார். அவிநாசி சித்தர் பீடம் சின்னசாமி சுவாமிகள் அருளுரை வழங்கினார். மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 50,000 பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர். காலை 7:00 மணிக்கு துவங்கி மாலை வரை பல ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 2,000 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன, ஜோதிடர் ராஜ் பார்த்தசாரதி எழுதிய பழனி ஆண்டவர் கோயில் ஸ்தல புராணம் விழாவில் வெளியிடப்பட்டது. புனித நீர் டிரோன் வாயிலாக பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பேச்சாளர் தேச மங்கையர்கரசி பேசுகையில், "ஆன்மீகமே வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும். நமது சந்ததியினரை ஆன்மீக வழியில் கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது," என்றார்.