பதிவு செய்த நாள்
01
பிப்
2023
05:02
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
வைணவ ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலுக்கு 600 ஆண்டு கால புராதன வரலாறு உண்டு. கடந்த 2004 முன்பு வரையிலும் பிரதானமாக சவுந்தரவல்லி தாயார், பெருமாள் சன்னதிகளுடன் சொர்க்கவாசல், கருடாழ்வார், கம்பத்தடியார், விஷ்வசேனர் உப சன்னதிகள் மட்டும் இருந்தன. கடந்த 2006ல் நடந்த கும்பாபிஷேகத்தில் சக்கரத்தாழ்வார், பக்தஆஞ்சநேயர், லட்சுமிநரசிம்மர், ஸ்ரீஆண்டாள் சன்னதிகள் புதிதாக உருவாகின. தற்போதைய கும்பாபிஷேக திருப்பணியில் கூடுதல் சிறப்பம்சமாக பெருமாள், சவுந்தரவல்லி தாயார் சன்னதி கர்பகிரகங்களை சுற்றிலும் நீராழி அமைக்கப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்பதால் அடுத்த கும்பாபிஷேகத்திற்காக கடந்த 2021 நவம்பரில் பாலாலய பூஜையுடன் திருப்பணி துவங்கியது. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் என்.பத்மநாபன், ரியல் எஸ்டேட் பிரமுகர் என்.ஆர்.ஏ. முரளிராஜன் ஆகியோர் திருப்பணிக்கு பொறுப்பேற்றனர். பல்வேறு நன்கொடையாளர்கள் பங்கேற்க, திருப்பணி முடிவுற்று கடந்த ஜன.30 ல் கும்பாபிஷேகத்திற்கான யாக பூஜைகள் துவங்கின.
கும்பாபிஷேகம்: இன்று அதிகாலை 6ம் கால ஹோமம் நடந்தது. தொடர்ந்து ராஜமன்னார்குடி மனவாள மாமுனிகள் 4வது பீடம் சென்டலங்கார ஜீயர் சுவாமிகள் முன்னிலை வகிக்க, காலை 10:18 மணிக்கு விமானம் (ராஜகோபுரம்), மூலமூர்த்திகளுக்கு புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திருவெள்ளறை பெருமாள் கோயில் தலைமை அர்ச்சகர் ரமேஷ் பட்டாச்சாரியர் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம், பேரூராட்சி தலைவர் நிருபாராணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், தென்னம்பட்டி ஊராட்சி செயலாளர் இளங்கோ, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், கோயில் செயல் அலுவலர் கற்பகவெண்ணிலா பங்கேற்றனர். திண்டுக்கல் எஸ்.பி., பாஸ்கரன், டி.எஸ்.பி., துர்காதேவி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாலையில் திருக்கல்யாண உற்ஸவம், கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.