பதிவு செய்த நாள்
06
பிப்
2023
10:02
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம், ‘கந்தனுக்கு அரோகரா’ பக்தி கோஷம் விண்ணதிர கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து, தேரை இழுத்தனர்.
உலகம் முழுவதும் முருகப்பெருமான் கோவில்களில், தைப்பூசத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, சென்னிமலை மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, 5:40 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. தேர்நிலையை சுவாமி, 5:50 மணிக்கு அடைந்தது. பின் உற்சவ மூர்த்திகள் தேரை மூன்று முறை வலம் வந்து, 6:20 மணிக்கு மூன்று தேர்களில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டனர். முதல் தேரில் விநயாக பெருமான், பெரிய தேரில் முருகப்பெருமான் அமர்தவள்ளி, சுந்தரவள்ளி சமேதராக தங்க கவச அலங்காரத்தில் இடம் பெற்றனர். மூன்றாம் தேரில் நடராஜர் சமேதராக எழுந்தருளினார். அதை தொடர்ந்து கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. காலை, 6:25 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அதை தொடந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர். அப்போது ‘கந்தனுக்கு அரரோகரா’, ‘முருகனுக்கு அரோகரா’ என்று பக்தி கோஷமிட்டனர். வழி நெடுக திரண்டிருந்த பக்தர்கள், தேர் மீது உப்பு, மிளகு துாவியும், கடலைக்காய், நெல் துாவியும் முருகப்பெருமானை வழிபட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள், காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 7:05 மணிக்கு தெற்கு ராஜவீதியில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலை, 5:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கி தெற்கு, மேற்கு ரத வீதிகளில் வலம் வந்து வடக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. திருத்தேர் இன்று மாலை, 5:00 மணிக்கு நிலை அடைகிறது.