பதிவு செய்த நாள்
06
பிப்
2023
10:02
திருத்தணி, : திருத்தணி முருகன் கோவிலில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, சந்தன காப்பு, தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று, தைப்பூசம் மற்றும் வார விடுமுறை ஞாயிறு என்பதால் வழக்கத்திற்கு மாறாக, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மலர், மயில்காவடிகள் எடுத்தும் அலகு குத்தி, மொட்டை அடித்தும் நிறைவேற்றினர். தேர்வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், வெயிலில் இருந்து தப்பிக்க தற்காலிக நிழற்குடைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொதுவழியில் பக்தர்கள், ஆறு மணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், குறைந்தபட்சம் மூன்று மணி நேரமும் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருக பெருமான் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர் வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் இருந்ததால், மலைக்கோவிலுக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள், கார், வேன் மற்றும் ஆட்டோக்கள் மலைப்பாதை நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவின்படி, திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன்: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடைபெற்ற தைப்பூச விழாவிற்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன், மகனுடன் வந்தார். பின், ஆபத்சகாய விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகர் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.பின், எல்.முருகன் கூறியதாவது:கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம், 26ல், வேல் யாத்திரை நடத்தி, திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தேன். அப்போது, தைப்பூச விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்து, அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் அனைத்து முருகன் கோவில்களில் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.