பதிவு செய்த நாள்
06
பிப்
2023
07:02
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்லமுத்து குமாரசாமி, அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரி ஆகியோர் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றன. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து தினமும் ஏராளமானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தை மாத உற்சவத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தினமும் சாமி, அம்பாள், விநாயகர், முருகன் உள்ளிட்டோர் வீதி விழா கட்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று 9ஆம் நாள் திருவிழாவாக தேர் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மேல வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் செல்வமுத்துகுமாரசாமி வள்ளி தெய்வானையோடு வைக்கப்பட்டு மேல தாளங்கள் முழங்க கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் தேரினை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் மேல வீதியை வந்து அடைந்தது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், செயல் அலுவலர் அசோகன், திமுக மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆனந்தன், வர்த்தக சங்க செயலாளர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்தது. இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. தொடர்ந்து தேர் திருவிழாவை முன்னிட்டு அகற்றப்பட்ட மின் இணைப்புகள் விழா முடிந்த உடன் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.