பதிவு செய்த நாள்
09
பிப்
2023
12:02
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவ விழா, வரும் 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் உற்சவர் வீதி உலா, திருப்போரூர் பேரூராட்சி, 15வது வார்டு, படவேட்டம்மன் கோவில் தெரு பகுதிக்கு வர வேண்டும் என அப்பகுதி கவுன்சிலர் பாரதி, ஹிந்து அறநிலையத் துறை உதவி கமிஷனருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 17ம் நுாற்றாண்டின் இறுதியில், திருப்போரூர் ஊருக்கு வந்த முதல் ஆதீனம் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள். அவர், இந்த ஊரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவிலை மறுசீரமைப்பு செய்தார். முருகன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக, கிராம காவல் தெய்வமான முண்டச்சி அம்மன் தாய்வீடான எங்கள் பகுதிக்கு வந்து, முதல் மரியாதை பெற்ற பின் தான், முருகன் கோவில் பிரம்மோற்சவ விழாவே நடைபெறுவது வழக்கம். கடந்த நுாற்றாண்டுகளாக, முருகன் கோவில் பிரம்மோற்சவ விழாவின் போது, முருக பெருமானின் உற்சவர் தேர், மாடவீதிகளிலும், ஊர் தெருக்கள் வழியாகவும், அருகில் உள்ள தண்டலம், ஆலத்துார் போன்ற பக்கத்து கிராமங்களுக்கும் சென்று வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் எங்களது 15வது வார்டு, படவேட்டம்மன் கோவில் தெரு, ஆதிதிராவிடர் பகுதிக்கும் வந்து செல்ல, ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.