பதிவு செய்த நாள்
09
பிப்
2023
04:02
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் வரும், 18ம் தேதி நடக்கும், மஹா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்.
கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழா, வரும், 18ம் தேதி மாலை, 6:00 மணி முதல் துவங்கி, மறுநாள் காலை, 6:00 மணி வரை ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடக்கிறது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழா, தியான லிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் துவங்குகிறது. தொடர்ந்து, லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, சக்தி வாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ் பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விடிய விடிய மஹா சிவராத்திரி விழா நடக்க உள்ளது. இவ்விழாவில், தலைமை விருந்தினராக, ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக, வரும், 18ம் தேதி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் முடித்த பின், மதியம், மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு செல்கிறார். அன்று இரவு, மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின், கோவை சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார். அதன்பின், 19ம் தேதி காலை, கோவை விமான நிலையத்தில் இருந்து, டெல்லி புறப்பட்டு செல்கிறார்.